சென்னை:பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரன் நகர் இரண்டாவது தெருவில் தங்கி கட்டட வேலை செய்துவருபவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சபீர்அலி (20). இவர், நேற்று (செப். 8) முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து வீட்டில் தூங்கும்போது தனது சொல்போனை தலையின் அருகே வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், சபீர் அலியின் செல்போன் திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு கண்விழித்த சபீர்அலி, அவரது நண்பர்கள், தப்பிச்செல்ல முயன்ற திருடன் ஒருவனைத் துரத்தி மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து செல்போன் திருடனை சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள், அவனிடம் நடத்திய விசாரணையில், பல்லாவரம் அடுத்த மலைமேடு பகுதியைச் சேர்ந்த பூவரசம் (22) என்பதும் தப்பிச்சென்ற நபர் ஈஸ்வரி நகரைச் சேர்ந்த உசேன் (22) என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள், பல்லாவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அந்த வாகனத்தில் சென்று செல்போன் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, உசேனை கைது செய்த காவலர்கள், ஒரு இருசக்கர வாகனம், சபீர் அலியிடம் திருடப்பட்ட செல்போனை பறிமுதல்செய்தனர். மேலும், இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி: துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி