சென்னை: பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அயனாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திக்காகுளம் சாய்பாபா கோயில் அருகில் திலீப் குமார் என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவரவே, அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சக்திவேல் என்பவர் கஞ்சா கொடுத்ததாக திலீப் குமார் ஒப்புக்கொண்டார்.
அதன்படி காவலர் சக்திவேலை விசாரணை செய்தபோது, கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த ஒருவரிடம் 18 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அதனை எடை போடுவதற்கு முன்னர், காவலர் சக்திவேல் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை எடுத்து வைத்து திலீப் குமாரிடம் கொடுத்து விற்க முயன்றது தெரியவந்தது.
மேலும், காவலர் சக்திவேலுக்கு அவருடைய நண்பர் காவலர் செல்வகுமாரும் உதவியுள்ளார். இதையடுத்து திலீப் குமார், காவலர்கள் சக்திவேல், செல்வகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:சிசிடிவி: வெங்கடாபுரம் ராமர் கோயிலில் திருட்டு