சென்னை: புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளங்களில் திறந்து வைக்கப்பட்டிருந்த 5 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளார். மறுநாள் காலை காவலர் வீடுகளில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருடு போன காவலர் குடும்பத்தினர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் மொத்தம் 5 காவலர்கள் குடும்பத்தில் திருடு போனதும், திருடுபோன பொருட்களில் மொத்த மதிப்பு 16 சவரன் நகைகள், ரூ.34 ஆயிரம் மற்றும் 3 செல்போன்கள் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் காவலர் குடியிருப்புக்கு சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை செய்த போது வெளி நபர்கள் யாரும் காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. பின் எழும்பூர் போலீசார், காவலர் குடியிருப்பில் சந்தேகப்படும்படியான நபர் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது எழும்பூர் ஆயுதப்படையில் பணி புரியும் காவல் உதவி ஆய்வாளரின் மகன் திருட்டு சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் இருந்து காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. காணாமல் போன நபர், அவரது நண்பருடன் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இருவரிடமும் நடத்திய விசாரணையில் 5 வீடுகளில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் திருடிய நபர்களில் ஒருவர் எழும்பூர் ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளரின் மகன் நந்தகோபால் (23) என்பதும், நந்தக்கோபாலின் நண்பரான புதுபேட்டையைச் சேர்ந்த அருண் (20) என்பதும் தெரியவந்தது.
தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வரும் காவல் உதவி ஆய்வாளரின் மகன் நந்தகோபால், போதை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதால், தனது செலவுக்காக நண்பருடன் சேர்ந்து காவலர் குடியிருப்பில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதே குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்காக பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை அடிக்கடி திருடி கடையில் விற்றும், காவலர்களின் பைக்கில் இருந்து திருட்டுதனமாக பெட்ரோல் திருடி விற்றும் செலவு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அப்போது பலமுறை காவலர் குடும்பத்தினரால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் என்பதும் இவரது தந்தைக்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட நந்தகோபால் மற்றும் அவரது நண்பர் அருணிடமிருந்து இருந்து திருடப்பட்ட 16 சவரன் நகை மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துக" - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை