சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்ணம்(82). மூதாட்டியான இவர் நேற்று முன்தினம் மாலை அமைந்தகரை மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது ஹெல்மெட்டுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டி ஸ்வர்ணத்திடம் பேச்சுக் கொடுத்து உள்ளார். பின்னர் அந்த நபர் தனது மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் வைத்துள்ளதாகவும், திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்திருப்பதாகவும் மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த நபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பார்த்து இதே போன்ற செயின் தான் தனது மகளுக்கு வாங்க இருப்பதாக கூறிவிட்டு அந்த செயினை ஒரு முறை போட்டோ எடுத்து விட்டு தருவதாக வாங்கியுள்ளார். பின்னர் அருகில் இருந்த பீரோ கடையில், திருமணத்திற்காக ஒரு பீரோவை தேர்வு செய்து தருமாறு அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் திடீரென அந்த நபர் 2.5 சவரன் செயினுடன் சாலையில் வந்த மாநகரப் பேருந்தில் ஏறி தப்பி சென்றுள்ளார். இதையடுத்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற ஹெல்மெட் அணிந்த நபர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஹெல்மெட்டுடன் ஏறிய அந்த கொள்ளையன் அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கி பிறகு ஒருவருடன் பைக்கில் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரித்து வடபழனி பகுதியை சேர்ந்த சிவகுமார்(42) மற்றும் சீனிவாசன்(47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் சுவாரஸ்ய தகவல் வெளியானது. கொள்ளையன் சிவகுமார் மீது ஒரு கொலை வழக்கு, கொள்ளை வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவகுமாரின் பள்ளிக்கால நண்பரான சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.