சென்னை மதுரவாயல், அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச் சந்தைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மதுரவாயல் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று (அக். 30) நள்ளிரவு மதுரவாயலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் சாலையோரமிருந்த லாரியிலிருந்து மற்றொரு வாகனத்திற்குப் பார்சல் இறக்கிக் கொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
மேலும், அந்தப் பார்சலை திறந்து பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த இரண்டு பேரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிலம்பரசன் (30), ராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் (32), என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் பெங்களூருவிலிருந்து தடைசெய்யப்பட்ட குட்காவை பெரிய பார்சல்களாக எடுத்துவந்து, இரவு நேரங்களில் செல்போன் மூலம் குட்கா தேவைப்படுவோருக்கு கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து பணம் வாங்கிச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ குட்கா, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.