சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் அதிக அளவில் எடுத்து செல்லப்படுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தனம்மாள் தலைமையில், போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததோடு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பூந்தமல்லி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக அரசு பேருந்தில் பயணம் செய்த இருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட கேட்டமைன் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் மதுவிலக்கு போலீசார் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… காரணம் என்ன?
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரித்த போது, பிடிபட்ட நபர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன்(45), ராம்குமார்(25), என்பது தெரியவந்தது.மேலும், இவர்கள் டெல்லியில் இருந்து கேட்டமைன் போதைப் பொருளை ரயில் மூலம் எடுத்து வந்து நாகப்பட்டினத்தில் வைத்து விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கேட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றிய போலீசார் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் போதைப் பொருளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக கொண்டுவந்தால் போலீசார் சோதனையில் சிக்கி கொள்வோம் என்பதற்காக வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரசு பேருந்து மூலம் பூந்தமல்லி கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:‘நானும் ரவுடி தான்’... என்னை தெரியாத ஆளே இல்ல... பெண் காவலருக்கு மிரட்டல் விடுத்த ரவுடி கைது!