சென்னையில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு - மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் கைது சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் சென்னை வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் தனியார் கேஸ் பங்க் அருகே தனியார் நிறுவனம் ஒன்று ஏழு மாடிக் கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 50 அடி பள்ளம் தோண்டப்பட்டு பேஸ்மெண்ட் போடப்பட்டது.
இந்த நிலையில் அந்த 50 அடி பள்ளத்தில் மண் சரி ஏற்பட்டு கேஸ் நிலைய அலுவலக கட்டிடம் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அங்கு இருந்த எட்டு பேர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 50 அடி பள்ளத்தில் சிக்கியிருந்த எட்டு பேரில் ஆறு பேரைப் பத்திரமாக மீட்டு முதல் உதவி அளித்து உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இரண்டு பேரை மீட்க முடியாமல் போனது. தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக அந்த 50 அடி பள்ளம் முழுவதும் மழை நீர் தேங்கி மூழ்கியதால் அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது இதை அடுத்து சம்பவ இடத்திற்கு எல்என்டி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், என்எல்சி உள்ளிட்டவர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று (டிச.8) அதிகாலை 5:00 மணி அளவில் பள்ளத்தில் சிக்கிய இருவரில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் அவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டெடுக்கப்பட்ட உடல் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பதும் அவர் அந்த தனியார் கேஸ் பங்கில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் பள்ளத்தில் சிக்கி உள்ள மற்றொருவரின் உடலைத் தேடும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் மோப்பநாய் உதவியுடன் மற்றொருவரின் உடலைத் தேடி வந்த நிலையில் தற்போது அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு உடலை மீட்டனர்.
மேலும், அந்த உடல் கட்டிடம் மேற்பார்வையாளர் ஜெயசீலன் உடல் தான் என உறுதி செய்யப்பட்டு அவரது உடலை போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்தப் பள்ளத்தில் இருந்து தற்போது முழு அளவில் தண்ணீர் வெளியேற்றியதால் அந்த மண் சரிவில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்ற கோணத்தில் மீட்புப் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
முன்னதாக அங்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இது குறித்து அவர் கூறுகையில், "விபத்துக்குள்ளான 50 அடி பள்ளத்தில் கனமழை காரணமாக அதிக அளவில் மழை நீர் தேங்கியது. சுமார் 275 மோட்டார்கள் மூலம் அந்த பள்ளத்தில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
தனியார் நிறுவனம் மிகப்பெரிய ஏழு மாடிக் கட்டிடம் கட்டுவதற்காக இந்த 50 அடி பள்ளத்தைத் தோண்டியுள்ளனர் மேலும் அதில் போடப்பட்ட பேஸ்மென்ட் நல்ல உறுதியுடன் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதுமட்டும் அல்லாது இந்த கட்டிடம் கட்டுவதற்கு யார் யாரிடம் அனுமதி பெற்றுள்ளார்கள்? என்ன மாதிரியான அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என்பது குறித்தெல்லாம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். இந்த விவகாரம் குறித்து தினமும் முதல்வர் விவரங்களைக் கேட்டு அறிந்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும். தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், எல்.என்.டி மற்றும் போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மேலாளர் எழில் மற்றும் மேற்பார்வையாளர் சந்தோஷ் ஆகியோர் மீது அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:மணலி பகுதியில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!