ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது - ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளை
சென்னை: ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்த இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
![ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது கைது செய்யப்பட்டு கொள்ளையர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:24:23:1596200063-tn-che-02c-house-breaking-two-aquest-arrest-vis-script-tn10021-31072020150102-3107f-1596187862-237.jpg)
சென்னை ஆவடியை அடுத்த மோரை, பங்காருபேட்டை, ஆலத்தூர், மிட்டனமல்லி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், டிவி, லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதாக ஆவடி டேங்க் பேக்டரி, புதுப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து காவல் ஆய்வாளர்கள் நடராஜ், ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்கள் தேடப்பட்டுவந்தனர். விசாரணையில், மேற்கண்ட கொள்ளைச் சம்பவங்களில் ஆவடியை அடுத்த மோரை, வினோ நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (30), அவரது தம்பி ஆதவன் (25) ஆகியோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் தலைமறைவாக இருந்த இருவரையும் இன்று (ஜூலை 31) கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐந்து சவரன் தங்க நகைகள், இரு டிவிக்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.