தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடனை திருப்பிக் கொடுக்க தாமதம் செய்த குறும்பட இயக்குனர் கடத்தல்.. சென்னையில் 7 பேர் கைது! - புரட்சி பாரதம் கட்சி

சென்னையில் வாங்கி கடனை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், குறும்பட இயக்குனர் உட்பட இருவரை கடத்தி தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Two
Two

By

Published : Mar 10, 2023, 1:58 PM IST

சென்னை:சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா(37). இவர் சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சைதன்யா, தனது நண்பர்கள் கடத்தப்பட்டதாக நள்ளிரவு 1 மணியளவில் வளசரவாக்கம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தனது நண்பர்களான குறும்பட இயக்குனர் முகமது ஐசக் மற்றும் முன்வர் ஹுசைன் ஆகியோரை சிலர் பணம் கேட்டு மிரட்டி, கடத்திவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் கடத்தப்பட்டதாக கூறப்படும் முகமது ஐசக் மற்றும் முன்வர் ஆகியோரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் காஞ்சிபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற காஞ்சிபுரம் போலீசார், கடத்தப்பட்ட இருவரையும் பத்திரமாக மீட்டனர், கடத்தல் காரர்கள் 7 பேரையும் பிடித்தனர். பிடிப்பட்ட 7 பேரையும் வளசரவாக்கம் காவல் நிலைய போலீசாரிடம் காஞ்சிபுரம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பம்மலை சேர்ந்த குறும்பட இயக்குனர் முகமது ஐசக் மற்றும் அவரது நண்பர் முன்வர் ஹுசைன் ஆகியோர் இணைந்து குறும்படம் எடுப்பதற்காக நண்பர் குமரன் என்பவரின் மூலமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளதாகவும், அதில் 30 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள 50 லட்சம் ரூபாயை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

நேற்று மீண்டும் கால அவகாசம் கேட்பதற்காக ஐசக், முன்வர் இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர், ஐசக் மற்றும் முன்வரை தாக்கி அறையில் வைத்து அடைத்துள்ளனர். உடனடியாக 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையென்றால் விட மாட்டோம் என அவர்கள் மிரட்டியதால், நண்பர் சைதன்யாவை தொடர்பு கொண்டு 5 லட்சம் பணத்தை கேட்டதாக தெரிகிறது. அதன் பிறகு சைதன்யா இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் செல்வம்(39), குட்டி சதீஷ்(44), வல்லரசு(24), உதயகுமார் (24), குமரன்(40), ருஜிநேஷ்வரன்(41), தனராஜ்(36) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரவுடி சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details