தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் கைது - Chennai Police

சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் கைது
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட இருவர் கைது

By

Published : Oct 10, 2022, 9:11 AM IST

Updated : Oct 10, 2022, 9:31 AM IST

சென்னைஎம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில், அதிகாலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி அடுத்தடுத்து மூன்று பேரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். அதேநேரம் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து 17 வயது சிறுவனை கைது செய்த காவல் துறையினர், சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகர் பகுதியைச்சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக் (20) வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது அபிஷேக்கின் மொபைல் போனை சோதனை செய்தபோது, கஞ்சா செடியின் புகைப்படத்தை காவல் துறையினர் பார்த்துள்ளனர்.

மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், வீட்டின் மொட்டை மாடிக்குச்சென்று பார்த்துள்ளனர். அங்கு தண்ணீர் தொட்டிக்கு அருகே மறைவாக மண் தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அபிஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா வாங்கி பயன்படுத்தி, அதில் உள்ள விதைகளை நட்டுச்செடிகளாக வளர்த்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அதேபோல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தும், கஞ்சா விநியோகித்து வந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அபிஷேக்(20) மற்றும் அவரது கூட்டாளியான சதீஷ் ஆகிய இருவரை எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இருப்பினும் இப்பகுதி கே.கே. நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், கைது செய்த இருவரையும் எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு காவல்துறையின் 'ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை' - 48 மணிநேரத்தில் 1310 ரவுடிகள் கைது

Last Updated : Oct 10, 2022, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details