தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து; 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..! - Chennai Car Accident death

Chennai Car Accident: சென்னையில் அசுர வேகத்தில் வந்த கார் சலையில் சென்றவர்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Two people died in Chennai Anna Nagar car accident
சென்னை கார் விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 7:00 PM IST

சென்னை:அண்ணா நகர் 2வது அவென்யூ வழியாகத் திருமங்கலம் நோக்கி இன்று (நவ.13) அதிகாலை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கோரா ஃபுட்ஸ் எதிரே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரம் இருந்த இரும்பு கம்பிகள் மீது மோதி சாலையோர நடைமேடையில் முட்டிநின்றது. இந்த விபத்தில், நடைமேடையில் நடந்து சென்றவர்கள் மற்றும் அங்கு அமர்ந்திருந்த நபர்கள் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டனர். இதில், சாலையில் நடந்து சென்ற பெண் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படுகாயமடைந்த கல்லூரி மாணவன் விஜய் யாதவ் (21) மற்றும் சூப்பர் மார்க்கெட் காவலாளி நாகசுந்தரம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய காரிலிருநத் ரமணா மற்றும் அவரது பெண் தோழி ஆகிய இருவரும் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. காரில் மதுபோதையில் இருந்த ஆசிப் என்ற மற்றொரு நபரை மட்டும் திருமங்கலம் போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த ஆசிப் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு மது விருந்தை முடித்துவிட்டுத் திரும்பியபோது, விபத்து நடந்ததுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆசிப் மீது, அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல், மதுபோதையில் வாகனத்தை இயக்கியது உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பகல் நேரங்களில் காவல்துறையினர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்திப் பரிசோதித்து வருகின்றனர். ஆனால், நள்ளிரவு ஒரு மணிக்குமேல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதில்லை எனவும், இதனாலே அதிகப்படியானோர் மதுபோதையில் வாகனங்களை இயக்கி இது போன்ற விபத்துகளை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, நள்ளிரவு நேரத்திலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனப் பொதுமக்கள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுபோதையில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், கல்லூரி மாணவர் உட்பட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக வந்த கார் மோதி 6 பேர் படுகாயம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details