சென்னை: சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் வெப்ப சோதனை செய்யப்படுகிறது - வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்படுகிறது. பயணிகளுக்கு கரோனா தொற்று அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கரோனா! - சென்னை விமான நிலையத்தில் கரோனா சோதனை
துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது பிஎஃப்7 வகை உருமாறிய கரோனவா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று (டிச.27) அதிகாலை துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இரண்டு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ஆண், பெண் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு பரவியுள்ளது பிஎஃப்7 வகை உருமாறிய கரோனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.