சென்னை: ஏர்டெல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக இணையதளம் மூலம் சர்வதேச தொலைத் தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தின் நோடல் அலுவலர் ஜெயகுமார் என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் கடந்த சில நாட்களாக பல்லாவரம் பகுதியில் சட்ட விரோதமாக ஏர்டெல் நிறுவனத்தின் தொலை தொடர்பை எவரோ பயன்படுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் அவர் கொடுத்த விவரங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்லாவரம் ஒலிம்பியா கிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல் பெரும்பாக்கம் பொலினேனி அடுக்குமாடி குடியிருப்பு, தாழம்பூர் டிஎல்எப் கிராண்ட் சிட்டி ஆகிய பகுதிகளில் தங்கி தொழில் நுட்ப சாதனைங்களை பயன்படுத்தி போலியாக சிம்கார்டு ஆக்டிவேட் செய்து சட்டவிரோதமாக பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதும் அந்த விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.