கரோனா தொற்று ஏற்பட்டு நுரையீரல் 95 விழுக்காடு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகியோர் சிகிச்சைக்குப் பின்னர் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியிலிருந்து இன்று வீடு திரும்பினர். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முனியம்மாள் ஆஷா (58) கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டு 90 விழுக்காடு நுரையீரல் பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90 விழுக்காடு நுரையீரல் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் பேட்டி அவருக்கு உடனடியாக உயிர்காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் அளிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 90 நாள்கள் அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் (45) கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி 95 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகச்சிறந்த நோய் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்கள், சிறந்த மருத்துவர்கள், செவிலியர், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரின் தன்னலமற்ற மருத்துவச் சேவையால் இந்த இரு நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ் குணமடைந்தவர்களை வாழ்த்தி மலர்கொத்து கொடுத்து அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: நுரையீரல் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு