சென்னை அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி ஆகிய பகுதிகளில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் பயணிகளிடம் பேச்சுக் கொடுப்பது போல் நூதன முறையில் தங்க நகைகளை பறிக்கும் இரண்டு பெண் திருடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பிடித்து விசாரித்தபோது மாரியம்மாள் 58, ராமு 65 என்பது தெரியவந்தது.
ஷேர் ஆட்டோவில் நகைகளைத் திருடும் பலே திருடிகள் கைது!
சென்னை: ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளின் கவனத்தைத் திசைத் திருப்பி நூதன முறையில் தங்க நகைகளை திருடும் பலே திருடிகளை காவல்துறையினரால் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி ஒருவர் அம்பத்தூர் கனரா வங்கியில் இருந்து முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி வழியாக ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது, இவர்கள் இருவரும் அந்த மாணவியிடம் பேச்சு கொடுத்து நூதன முறையில் மாணவியின் கையில் போட்டிருந்த வளையலை திருட முயன்றபோது திருமுல்லைவாயல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இவர்கள் கடந்த 20 நாட்களாக அம்பத்தூர் ரயில் நிலையம், ஆவடி, திருமுல்லைவாயில் மற்றும் ராக்கி திரையரங்கம் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையில் இருந்து சென்னை வந்து வழிப்பறி செய்வதையே தொழிலாக வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும், இருவரிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.