சென்னை:ஆவடி வசந்தம் நகர் சிவகுரு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர் (29). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஆவடி, நேரு பஜார், மசூதி பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன் (30). இவர் மீன் கடை ஊழியர். இவரது மனைவி கவுசிக். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தர், அசாருதீன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் வேலை நேரத்தை தவிர மற்ற இடங்களில் ஒன்றாக சென்று விட்டு வீடு திரும்புவார்கள். இதற்கிடையில், நேற்றிரவு (மார்ச் 13) சுந்தர், அசாருதீன் இருவரும் இரவு 10மணி வரை வீடு திரும்பவில்லை. இவர்களது செல்ஃபோனுக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள் இவர்கள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில், ஆவடி உதவி ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தையடுத்து உறவினர்கள் அங்கு சென்றனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து நள்ளிரவு 12 மணியளவில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். ஆவடி, கொள்ளுமேட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (32). இவரது மனைவி பிரசில்லா. 2018ஆம் ஆண்டு மணிகண்டன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது வேப்பம்பட்டை சார்ந்த ஜெகன் (30) என்ற ஆட்டோ ஓட்டுநர், மணிகண்டனை ஜாமீனில் எடுக்க உதவி செய்துள்ளார்.
இதன் பிறகு, அவரது மனைவி பிரிசில்லாவுடன் ஜெகனுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெகன், பிரிசில்லாவை அழைத்து கொண்டு சென்று விட்டார். இதன்பிறகு, மணிகண்டன் பலமுறை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்து ஜெகனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதன்பிறகு மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெகன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது ஜெகனிடம் இருந்து தப்பிக்க மணிகண்டன் 10 நாள்களில் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறியிருக்கிறார்.