சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (மே.17) மாலை தொழிற்சாலைக்கு உபகரணங்கள் கொண்டு வந்த கடைசி வாகனம் வெளியேறியுள்ளது. அப்போது தொழிற்சாலை பணியாளர்கள் நுழைவு வாயிலில் உள்ள 15 அடி உயரம், 20அடி நீளம் கொண்ட இரும்பு கேட்டை மூடியுள்ளனர். திடீரென கேட்டின் அடிப்பகுதியில் உள்ள சக்கரம் அதன் அச்சிலிருந்து சரிந்து கீழே சாய்ந்தது.
அப்போது கதவின் அருகே நின்று கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் லக்குமணன்(41), மூத்த பொறியாளர் நற்குணன்(55) ஆகியோர் மீது கேட் விழுந்தது. இதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்ட சகப் பணியாளர்கள் சிகிச்சைக்காக ஐசிஎப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.