சென்னை: நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர், முறையாக போராட்டத்தை தடுத்து நிறுத்தாமல் செயல்பட்டதால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் திஷா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.