சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடப்பாண்டிலேயே 1,050 கோடி செலவில் 7,200 வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதில் தற்போது ரூ.240 கோடியில் கட்டடங்கள் கட்டுவதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் ரூ.280 கோடி மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ரூ.1,050 கோடி மதிப்பீட்டில் 7,200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு 800 கோடி நிதி தேவை என ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் கோரியுள்ளார். அதில் நடப்பாண்டில் 240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
2023-24 ஆம் ஆண்டில் மீதமுள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கல்வி அலுலவர்கள் இணைந்து எந்த பள்ளிக்கு முன்னுரிமை அளிப்பது என்பதை முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.