உயர்கல்வி பயில தைவானுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிகள் சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் 2 பேர் தைவான் நாட்டு பல்கலைக் கழகத்தில் உயர்கல்விப் பெறுவதற்கு தேர்வாகி உள்ளனர். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம், ஐஐடி மற்றும் என்ஐடி போண்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் 247 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கான பாராட்டு விழா, பள்ளி கல்வி துறை சார்பில் சென்னையில் நடைபெற்றது. அப்போது, தேர்வான அனைத்து அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுக்களை தெறிவித்து, சாண்றிதழ்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இது குறித்து தைவான் நாட்டிற்கு செல்லும் மாணவி ஆவல் சிந்து கூறும்போது, "அரசுப் பள்ளியில் படித்த தன்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரிப் பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தனர். அங்கு தைவான் நாட்டில் படிப்பதற்கான போட்டித்தேர்வினை எழுதினேன். அதில் தகுதிப் பெற்றுள்ளதால் தைவான் நாட்டில் இன்டர்நேஷனல் பிசினஸ் அண்டு மேனேஸ்மென்ட் பட்டப்படிப்பினை படிக்க உள்ளேன். எனது அப்பா, அம்மா இன்ஜினியர். மாதிரிப் பள்ளியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். அதன் பின்னர் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டியதிருக்கும்." என தெரிவித்தார்.
தைவான் நாட்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தேர்வாகியுள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அரசுப் பள்ளிகளில் பயின்ற
மாணவி ஜெயஸ்ரீ கூறும்போது, "தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பெற்று தைவான் நாட்டின் குன் ஷான் (Kun Shan) பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயந்திர பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அரசுப் பள்ளியில் படித்தேன். அதனைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள மாதிரிப் பள்ளியில் படித்தேன்.
அதன் பின்னர் தமிழ்நாடு அரசின் தகைச்சால் பள்ளியில் படித்தேன். தைவான் நாட்டில் படிப்பதற்கான தேர்வினை எழுதி, அதில் தகுதிப்பெற்றுள்ளேன். குக்கிராமத்தில் பிறந்து கடல் கடந்து வேறொரு நாட்டிற்கு கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது தந்தை கூலி வேலை செய்கின்றனர். மாதிரிப் பள்ளி மட்டும் இல்லாமல் ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் மாதிரிப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கிது. அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக படிக்க வேண்டும்" என கூறினார்.
சென்னை ஐஐடியில் படிப்பதற்கு வாய்ப்பு பெற்றுள்ள சேலம் மாவட்டம் அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் வசந்தகுமார் கூறும்போது, "சேலம் மாவட்டம் விருதாசம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரையிலும், அதன் பின்னர் மாதநாயகன் பட்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரையிலும் படித்தேன். 12 ஆம் வகுப்பினை சேலம் மாதிரிப் பள்ளியில் படித்தேன்.
அப்போதே சென்னையில் உள்ள மாதிரிப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டு ஜெஇஇ தேர்வினை எழுதி முதல் முறையிலேயே தகுதிப்பெற்று சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளேன். எனது அப்பா ஸ்பின்னிங் மில்லில் வேலைக்கு செல்கிறார் மற்றும் அம்மா கூலி வேலைக்கு செல்வார். நான் தான் எங்களது குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. அரசே அனைத்து உதவிகளையும் செய்வதால் மாணவர்கள் படித்தால் மட்டுமே போதும். மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு தேர்வினை எழுதி தகுதிப்பெற முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு: 193 கல்லூரியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்!