சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' உள்நாட்டு விமானம், நேற்றைய முன்தினம் (நவ.21) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையம் முதல் முனையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் இரண்டு பெண்கள், பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் உள்நாட்டு முனையத்திற்கு விரைந்து வந்து, விமானத்தில் வந்த பயணிகளைக் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு பெண் பயணிகளையும் நிறுத்தி விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்தப் பெண் பயணிகள் தாங்கள் உள்நாட்டு விமானத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வருவதாகவும், தங்களை நிறுத்தி எப்படி சோதனை நடத்தலாம் என்றும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை பொருட்படுத்தாத சுங்கத்துறை அதிகாரிகள், அந்த இரண்டு பெண் பயணிகளை அவர்களது உடைமைகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.