சென்னை வேங்கை வாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பணத்தேவை காரணமாக எம் ரூபி (MRupee) என்ற லோன் ஆப்பை கூகுள் ஃப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து, ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1500 வட்டியாக பிடித்துக்கொண்டு 3500 மட்டும் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர். சில தவணைகள் கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார்.
தகவல்கள் திருட்டு
பின்னர் இந்தக் கடனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது, அதனை அடைப்பதற்காக மற்றொரு லோன் ஆப்பில் கடன் வாங்குவது என கணேசன் 40 லோன் ஆப்பில் கடன் வாங்கி பணம் கட்ட முடியாத திண்டாடி உள்ளார். இதனால் லோன் ஆப் கால் சென்டரில் இருந்து தொடர்ச்சியாக இவருக்கு ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரது தகவல்களையும் திருடி நெருங்கிய நண்பர்களிடமும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மிரட்டல் வந்த மொபைல் நம்பர்களை ட்ரேஸ் செய்தபோது, அவற்றில் பெரும்பாலான மொபைல் எண்கள் பெங்களூரில் உள்ள True Kindle Technology Pvt.Ltd. என்ற ஒரே கால் சென்டரில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவலர்கள், 110 நபர்களை ஊழியர்களாக வைத்து கால் சென்டரை நடத்திவந்த பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகிய இருவரை கடந்த 31ஆம் தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்கள், 20 செல்போன்களை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சீனா, க்வாண்டாங் பகுதியை சேர்ந்த சியா யமோவ், யூ யுவ்ன்லூன் ஆகிய இருவரும் சீனாவிலிருந்து பெங்களூரில் தங்கி இந்த லோன் ஆப்களுக்கு முதலீடு செய்து அதனை நடத்திவருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பாஸ்போர்ட் காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் பல மாதங்களாக தங்கி இருந்து, லோன் ஆப்கள் நிறுவனம் நடத்திவந்துள்ளனர்.
வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...
இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் க்ரைம் காவலர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீனாவை சேர்ந்த ஹாங்க் (hong) என்பவர் இந்தியாவில் இதுபோன்று பல லோன் ஆப் பெயர்களில் ஆன்லைன் லோன் ஆப்கள் நடத்திவருகிறார்.