சென்னை:அண்மையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கள்ளச்சாராயம் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கவில்லை என்பதும், அவர்கள் மெத்தனால் என்ற விஷச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்துள்ளதாக அப்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, விஷச்சாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய கெமிக்கல் பேக்டரியின் உரிமையாளர் இளைய நம்பி உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கின் தீவிரத் தன்மையை அறிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க விஷச் சாராயம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டிக்கு (CBCID) மாற்றி அப்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். மேலும் விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட 17 பேர் மீது இருந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.......சதுர்வேதி சாமியார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு