சென்னை வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர் காரில் கஞ்சா கொண்டு வந்து சப்ளை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே அந்த நபர் காரில் வந்து கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பது தெரியவந்ததையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவரின் காரை பிடிக்க துரத்திச் சென்றுள்ளனர்.
அப்போது காசி தியேட்டர் அருகே காரை மடக்கிப் பிடித்து காவல் துறையினர், வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். காரின் ஓட்டுநரை பிடித்து விசாரிக்கும் போது அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்து பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது. இவர் சோழவரத்தை சேர்ந்த சுமன் என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த தகவலின் பேரில் சோழவரத்தில் உள்ள சுமனின் வீட்டை காவல் துறையினர் சோதனை செய்ததில், அங்கு இரண்டு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து சுமனையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.