சென்னை மாவட்டம், ஆதம்பாக்கம், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைத்து நகை, பணம் உள்ளிட்டவை திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நேற்று முன்தினம் (நவ.22) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பல்லாவரத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (58) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் (42) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பள்ளிகரணை, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருட்டு குற்றங்களுக்காக இருவரும் சிறையில் இருந்தபோது அறிமுகமாகி நண்பர்களாக மாறியதாகவும், இருவரும் சேர்ந்து திருட்டு வேலைகளில் ஈடுபட ஒப்பந்தம் செய்து கொண்டுதாகவும் கூறினர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து 17 சவரன் தங்க நகைகளும், இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் லோன்: திருப்பி செலுத்த முடியாமல் ஐடி ஊழியர் தற்கொலை?