சென்னை:மவுண்ட் ரோடு முகமது ஹுசைன் சாஹிப் தெருவில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருபவர் ஜதேஷ் (31). கடந்த ஜனவரி 13ஆம் தேதி இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு ஜதேஷ் வீட்டிற்குச் சென்றார். பின்பு அடுத்த நாள் காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து கடைக்காரர் ஜதேஷிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடைக்கு விரைந்த ஜதேஷ் கல்லாப்பெட்டியைப் பார்த்தபோது அதில் வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய், மூன்று செல்போன்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடையருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், இருவர் கடப்பாரையைக் கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகியிருந்தது.
சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்
இதையடுத்து சிசிடிவியில் பதிவான நடைபாவனை காட்சிகளை வைத்து பழைய குற்றவாளிகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேறு வழக்கின் குற்றவாளிகள் வினோத், நாகராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கொள்ளைச் சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் அழைப்புகளை ஆய்வு செய்தபோது வினோத், நாகராஜ் கொள்ளையில் ஈடுபட்டதை காவல் துறையினர் உறுதிசெய்தனர்.
இதனையடுத்து அவர்கள் சென்ற சிசிடிவி காட்சிகளை வைத்து சிந்தாதிரிப்பேட்டையில் பதுங்கி இருந்த வினோத் (19), நாகராஜ் என்கிற பாம்பு நாகராஜை இன்று (ஜனவரி 15) காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்த மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல்செய்தனர்.