சென்னை:தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு வியாபாரம் சட்ட விரோதமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ்-க்கு தொடர்ந்து தகவல் வந்த வண்ணம் இருந்து உள்ளது.
இதனையடுத்து காவல் ஆணையர் அமல்ராஜ், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு, அந்தந்த காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வேலை தேடுபவர்களே உஷார்.. எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்!
இந்த நிலையில், தாம்பரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராஜாஜி ரோடு, ஜிஎஸ்டி ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த இரண்டு நபர்களைப் பிடித்து தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டு உள்ள லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற அப்துல்லா (39), கடலூர் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32) என தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் பல மாதங்களாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆகியோர்களிடம் இருந்து இரண்டு மற்றும் நான்கு இலக்க எண்களைக் கொண்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததும் தெரிய வந்து உள்ளது.
பின்னர் அவர்களிடம் இருந்து மூன்று மற்றும் நான்கு இலக்க எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகள், ரூ.8 லட்சம் பணம், 2 கார், ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் கத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி விவகாரம் - செக் பவுன்ஸ் ஆனதால் தொழிலதிபர் வேதனை!