தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைனில் வேலை தேடுபவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது! - Two arrested for online cheating in chennai

சென்னை: ஆன்லைனில் வேலை தேடுபவர்களை குறிவைத்து போலியான வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனம் மூலம் மோசடி செய்த இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Cheating  ஆன்லைன் மோசடி  ஆன்லைனில் வேலை தேடுபவர்கள் குறிவைத்து மோசடி  ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது  Two arrested for online cheating  Two arrested for online cheating in chennai  online cheating
Two arrested for online cheating in chennai

By

Published : Mar 24, 2021, 8:14 PM IST

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் எலெக்ட்ரீசியனாகப் பணிபுரிந்துவருகிறார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் அசோக்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "நான் ஆன்லைனில் வேலை தேடும் இணையதளம் மூலம் பதிவுசெய்து வேலை தேடிவந்தேன். அப்போது, செய்யது அபுதாகிர், செய்யது அலி ஹுசைன் என்ற இருவர் வெளிநாட்டு எண்களிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு டெல்ட்டின் இன்டர்நேஷனல் சொல்யூஷன் (deltin international solution) என்ற வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தின் இயக்குநர்கள் எனத் தெரிவித்தனர்.

பின்னர் எங்களது இணையதளம் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்கி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அந்நியச் செலாவணியில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தைக் கூறினர்.

அதை நம்பி கடந்த 2019 அக்டோபர் முதல் 2020 ஜனவரி வரை 11 தவணையாக ரேசர் பே (razerpay) என்ற பணப்பரிவர்த்தனை செயலி மூலம் ரூ.10.54 லட்சம் பணத்தைச் செலுத்தினேன்.

பின்னர் இருவரும் முதற்கட்ட லாபம் கிடைத்துள்ளதாக பொய் வார்த்தைகளைக் கூறி நம்பவைத்தனர். லாபம் கிடைக்கத் தொடங்கியதால், நானும் அதிக அளவு கடன் வாங்கி முதலீடு செய்தேன். ஆனால், அதிக முதலீடு செய்து லாபம் வராததால் தன்னை தொடர்புகொண்ட வெளிநாட்டு எண்களுக்குத் தொடர்புகொண்டபோது யாரும் பதில் அளிக்கவில்லை. அப்போதுதான் நான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தேன். எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நான் இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நிறுவனம் இருந்ததாகக் கூறப்படும் வடபழனியில் ஆய்வுசெய்தனர். அதில், நீண்ட நாள்களுக்கு முன்னதாக காலி செய்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், அவர்கள் பயன்படுத்திய வெளிநாட்டு எண்களைக் கொண்டு சைபர் கிரைம் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி மோசடியில் இறங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களது செல்போன் சிக்னல்களை வைத்து தேனாம்பேட்டையைச் சேர்ந்த செய்யது அபுதாகிர், கடலூரைச் சேர்ந்த அலி ஹுசைன் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், போலி வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை உருவாக்கி, நிறுவனத்தின் பெயரில் போலி இணையதளங்கள் மூலம் பலரையும் மோசடிசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக ஆன்லைன் மூலம் வேலை தேடுபவர்களில் பங்கு வர்த்தகம் குறித்து தெரியாத நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மோசடி செய்துள்ளதும், தமிழ்நாட்டில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதும், இதுபோன்ற நூதன முறைகேடு மூலம் சுமார் ஆறு கோடி ரூபாய் அளவில் பண மோசடி செய்துள்ளதும், கொள்ளையடித்த பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 94 ஆயிரம் ரூபாய், 5 மடிக்கணினிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் தொடர்புடைய நிறுவனத்தின் உண்மைத்தன்மையை அறிந்து முதலீடு செய்யுமாறு பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க:திருவாரூரில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க தனிக்குழு!

ABOUT THE AUTHOR

...view details