சென்னை:சூளை சிகேஎல் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் ராவ் (45). இவர் அண்ணாநகர் ஏ பிளாக் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி எழும்பூர் சென்று பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி என்பவரிடம் 3.50 லட்சம் ரூபாய் கலெக்க்ஷன் பணத்தை பெற்றுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அண்ணாநகர் 6வது பிரதான சாலை வழியாக வரும்போது அங்கு போலீஸ் என எழுதப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிரபாகர் ராவ்வை வழி மறித்துள்ளனர். மேலும், தாங்கள் போலீஸ் எனக்கூறி, ‘நீ எங்கு சென்று வருகிறாய், உன்னை சோதனை செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த 3.50 லட்சம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்ட அந்த கும்பல் பணத்தை காவல் ஆணையர் அலுவலகம் வந்து வாங்கி செல்லுமாறு கூறிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பிரபாகர், காவல் ஆணையர் அலுவலகம் சென்று விசாரித்துள்ளார். அப்போது அதுபோல் யாரும் இல்லை என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகர், இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீஸ்போல் நடித்து தப்பி ஓடிய நபர்களை தேடி வந்தனர். குறிப்பாக, சிசிடிவி காட்சிகள் மூலம் முக அடையாளங்களைக் கண்டுபிடித்து விசாரணை செய்ததில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பாலாஜி ஆகியோர் போலீஸ்போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.