தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 3, 2023, 12:56 PM IST

ETV Bharat / state

ஈபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக உறுப்பினர்கள் மனு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை ஏற்கக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் மனு அளித்துள்ளனர்.

Two AIADMK members petitioned the Election Commission not to recognize Edappadi Palaniswami as General Secretary
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் அதிமுக உறுப்பினர்கள் இருவர் மனு அளித்துள்ளனர்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தின் மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றமும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மட்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் உள்ளன.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈபிஎஸ்-சின் கோரிக்கைகளை ஏற்கக்கூடாது என அதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அதிமுக உறுப்பினர்களான பா.இராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் கொடுத்த மனுவில், "அதிமுக கட்சி விதிகள் படி கட்சியின் பொதுச்செயலாளர் அதிமுக கட்சியின் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகளை மீறி 2017 செப்.12-ஆம் தேதி பொதுச் செயலாளர் பதவியை நீக்கி விட்டு, பொதுச் செயலாளருக்கு உரிய அதிகாரங்களை கொண்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ஏற்படுத்திய பொதுக்குழு, அந்த பதவியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரையும் நியமனம் செய்தது. கட்சி விதிகளில் பொதுக்குழுவிற்கு எவ்வித அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை.

தொடர்ந்து 2021 டிசம்பர் 1ஆம் தேதி அதிமுக செயற்குழு கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து ஒரு கண்துடைப்பு உட்கட்சி தேர்தலை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உட்பட நடத்தியது. இவ்விரண்டு திருத்தங்கள் மற்றும் கண் துடைப்பு தேர்தலை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு 2021 டிசம்பர் 23ஆம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் நானும் (பா. இராம்குமார் ஆதித்தன்) மற்றும் திரு. கே. சி. சுரேன் பழனிசாமியும் ஒரு சிவில் வழக்கு வழக்கு எண். CS No. 102 of 2022 தாக்கல் செய்து இருந்தோம்.

அந்த வழக்கை அதிமுக கட்சி உறுப்பினர்கள் சார்பாக நடத்த உயர்நீதிமன்றம் 2022 ஏப்ரல் 24ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகளை திருத்தி பல மாற்றங்கள் செய்து, மீண்டும் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தாலும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட பல நிபந்தனைகளை அறிவித்தது.

2016 டிசம்பர் 5ஆம் தேதி வரை அதிமுக கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம். தற்போது திருத்தப்பட்ட விதிகள்படி 10 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும், 5 ஆண்டுகள் தலைமை கழகத்தில் பொறுப்பாளராக பதவி வகித்து இருக்க வேண்டும். பத்து மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். பத்து மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும்.

ஒரு மாவட்ட செயலாளர் ஒருவருக்கு தான் முன்மொழியலாம் அல்லது வழி மொழியலாம். கட்சியில் மொத்தம் 76 மாவட்ட செயலாளர்கள். அதிகபட்சமாக 3 x 20 மூன்று நபர்கள் தான் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம். இது தொண்டர்களின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் உரிமையை பறிப்பதாலும், எதிர் காலத்தில் புதிய தகுதிகளுடன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட யாரும் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் கட்சியில் குழப்பம் ஏற்படும் என்பதால் பொதுக்குழு அறிவித்த திருத்தங்களை ஏற்க கூடாது என ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்து இருந்தோம்.

இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் பரிகாரம் பெற எங்களை அறிவுறுத்தியது. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மார்ச் 17ஆம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தனர். கட்சி விதிகளில் கூறியவாறு பழைய உறுப்பினர் சேர்க்கையை புதிப்பிப்பித்தல், புதிய சேர்க்கை இன்றி, வாக்காளர் பட்டியல் இன்றி, பூத் கமிட்டி, வாக்குச் சாவடி, தேர்தல் அதிகாரிகள் குறித்த விவரங்கள் எதுவும் இன்றி பொதுச் செயலாளர் தேர்தல் அறிவித்தனர்.

இது தொண்டர்களின் வாக்கு செலுத்தும் உரிமை மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் உரிமையை பறித்ததால் பொதுச் செயலாளர் தேர்வை தடை செய்யவும், எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்து பதவி வகிக்க தடை கோரியும் மற்றும் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளோம். இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என உயர்நீதிமன்றம் அறிவித்தது. அது எங்களை கட்டுப்படுத்தாது. அவர்கள் வழக்கின் சாராம்சம் வேறு.

எனவே எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் தொடரவும், கட்சி உறுப்பினர் அட்டைகள் மற்றும் தேர்தலில் சின்னம் ஒதுக்க அளிக்கப்படும் படிவம்- A படிவம் - B 5 தடை விதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று 2018ல் உத்தரவிட்டது.

கடந்த 2016ம் ஆண்டு வரை அதிமுக கட்சியில் இணைய தளம் உண்டு. அதன் மூலம் உறுப்பினர் அட்டை கூட வழங்கினார்கள். எனவே மேற்படி இணைய தளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தற்போதைய பொதுச் செயலாளர் தொடர்பான வாக்காளர் பட்டியல், பூத் கமிட்டி, தேர்தல் அதிகாரிகள், வாக்குச் சாவடி போன்ற விவரங்களை அதில் பதிவேற்றம் செய்யவும், மீண்டும் உறுப்பினர் அட்டை இணையதளம் மூலம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கவும் உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுத் தாக்கல் செய்து உள்ளோம்.

இந்த சூழ்நிலையில் எங்கள் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை கட்சி விதிகளில் எவ்வித மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், எடப்பாடி கே பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது எனவும், அதிமுக கட்சிக்கு இணையதளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம்" புது ரூட்டில் பயணிக்கும் நயினார் நாகேந்திரன்.. அடுத்த திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details