சென்னை:பூக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி. இவர், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மாணவி ஜூன் 27ஆம் தேதியன்று காலை கொண்டித்தோப்பு சுந்தர முதலித் தெருவில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு மேற்கொண்டிருந்தார்.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை:
அப்போது, அங்குள்ள வீட்டிலிருந்த ஒரு நபர் மாணவியை வீட்டினுள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி இது தொடர்பாக பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொண்டித் தோப்பு சுந்தர முதலித் தெருவைச் சேர்ந்த வாலாராம் (45) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆசை வார்த்தை கூறி சிறுமிக்குப் பாலியல் தொல்லை:
அதேபோல தியாகராய நகர்ப் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், 'எனது 15 வயது வளர்ப்பு மகள் ஜூன் 26ஆம் தேதியன்று, என்னிடம் சண்டையிட்டுக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.
பெசன்ட் நகர் நடைபாதையில் அழுதுகொண்டிருந்த மகளை அவ்வழியாக வந்த ராஜ்மோகன் (49) என்பவர் ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனது மகளை அவரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடவடிக்கை எடுத்த காவல் துறை:
புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையைச் சேர்ந்த ராஜ்மோகனை பிடித்து, அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். மேலும், விசாரணையில் அவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, ராஜ்மோகனை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது