தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினாவில் மாமூல் கேட்டுத்தகராறு:'தரமுடியாது' எனக்கூறிய பெண்ணுக்கு வெட்டு - இருவர் கைது - மெரினா கண்ணகி சிலை

மெரினாவில் மாமூல் கேட்டதால் ஏற்பட்ட தகராரில் பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞரை உள்பட ஒரு பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மெரினாவில் மாமூல் கேட்டு தகராறு
மெரினாவில் மாமூல் கேட்டு தகராறு

By

Published : Aug 7, 2022, 4:08 PM IST

சென்னை தண்டையார்பேட்டை சிவன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் திவ்யா (30). இவர் தனது தோழி பிரியா என்பவருடன் சேர்ந்து மெரினா கண்ணகி சிலை பின்புறம் சுண்டல் கடை வைத்து நடத்தி வந்தார். திவ்யாவிற்கு குழந்தை பிறந்ததால் கடந்த ஒரு ஆண்டாக கடை நடத்தாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது தோழி பிரியா ஆகியோர் மீண்டும் மெரினாவில் சுண்டல் கடை போட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமா என்பவர் இங்கு சுண்டல் கடை வைக்க வேண்டுமென்றால், வினோத் என்பவருக்கு மாமூல் கொடுக்கவேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்கு திவ்யா 'மாமூல் தர முடியாது' எனக் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பின்னர் திவ்யா மற்றும் அவரது தோழி பிரியா ஆகியோர் நேற்றிரவு (ஆக. 06) கண்ணகி சிலைப்பேருந்து நிலையம் அருகே நின்றிருந்தபோது, வினோத் என்பவர் நேரில் வந்து மாமூல் கேட்டு திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திவ்யாவின் கை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார்.

காயமடைந்த திவ்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச்சம்பவம் தொடர்பாக திவ்யா மெரினா காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல், கொலை முயற்சி உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் பாத்திமா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தைச்சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான வினோத் (29) என்பதும், இவர் மெரினாவில் சுண்டல் கடை நடத்தும் வியாபாரிகளிடம் இருந்து மாமூல் வசூலித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் பரிசு பெற்றதாக கூறி ரூ 6.34 லட்சம் மோசடி செய்த வட மாநில கும்பல் கைது

ABOUT THE AUTHOR

...view details