சென்னை:சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இன்று(மார்ச்.9) மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இரண்டு கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளதாகவும், 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைக்கவில்லை எனவும், அவர்கள் வீடுதோறும் சென்று இணைக்க பணிகள் நடைபெற்ற வருவதாகவும் தெரிவித்தார்.
ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும், சில பகுதிகளில் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கியதாக தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.