சென்னை:பூந்தமல்லி பகுதியைச்சேர்ந்த 25 வயது பெண் கடந்த 10ஆம் தேதி மாலையில் ஏற்பட்ட விபத்தினால் பாதிக்கப்பட்டு, பூந்தமல்லி மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அவருக்கு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களினால் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களிடம் பேசியதில், உடல் உறுப்புகளை தானம் செய்ய அனுமதி வழங்கினர். அதனைத்தொடர்ந்து உடலுறுப்பு மாற்று ஆணையத்தின் விதிமுறைகளின்படி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை பெற்று மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், அப்போலாவில் மற்றொரு நோயாளிக்கு ஒரு சிறுநீரகமும், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கல்லீரலும், அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரலும், எம்எம்எம் மருத்துவமனைக்கு இதயமும், கண்மருத்துவக் குழுவினருக்கு 2 கண்களும் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டது.
மேலும், சாலைப் பாதுகாப்பு விதிகளை மதித்தும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இறந்தும் மற்றவர்கள் வாழ்க்கைக்கு உதவிய அப்பெண்ணின் குடும்பத்திற்கு வாழ்த்துகளையும், அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஜெயின் கோயில் கதவை உடைத்து நகை திருட்டு - கைவரிசை காட்டியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!