சென்னை:திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்திய போது, கோயிலில் இருந்த விஷ்ணு, தேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற நிலையிலுள்ள விஷ்ணு, நடனமாடும் கிருஷ்ணா ஆகிய 9 சிலைகளும் போலியான சிலைகள் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
அதன்பின் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட் மூலமாக திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பெற்று, அதை ஒப்பிட்டு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருவாரூரில் திருடப்பட்ட விஷ்ணு, தேவி, பூதேவி ஆகிய சிலைகளும், அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகளும் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் ஆத்தூரில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலில் திருடப்பட்ட சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதனை சிலை நிபுணர்களும் உறுதிப்படுத்தினர்.