இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்திலுள்ள தொடர்வண்டித்துறை, அஞ்சலகம், வங்கிகள், பாதுகாப்புத் தொழில்துறை, வருமானவரி, உற்பத்தி வரி, சுங்கவரி அலுவலகங்கள், ஆவடி திண்ணூர்தி தொழிலகம், திருச்சி ராணிப்பேட்டை பிஎச்இஎல் தொழிலகங்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, நெய்வேலி அனல் மின் நிலையம், வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகள், நிறுவனங்களில் 75 விழுக்காடு பணிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் இந்தி பேசும் வடமாநிலத்தவரே. அப்படியிருக்க, மத்தியில் பாஜக மோடி அரசு அமைந்ததில் இருந்து இந்தப் பணிகளில், இந்தி பேசும் வடநாட்டவரைத் திணிப்பது வேகமெடுத்தது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் களைய, மத்திய ரயில்வே தேர்வுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை எதிர்த்து இந்தாண்டு மார்ச்22 ஆம் தேதி சென்னை ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை - 2ஆவது பட்டாலியன் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். மேலும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு, முழுக்க வடநாட்டவரையே பணியில் அமர்த்தியதை எதிர்த்தும் மாபெரும் போராட்டத்தை நடத்தினோம்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள முறைசாரா தொழில்கள் யாவற்றிலும் வடநாட்டவரே நிரப்பப்படுகிறார்கள். இதனை முறைப்படுத்தவும் தமிழக மத்திய அரசுப் பணிகளில் 90விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றவும் வலியுறுத்தி தோழமை அமைப்புகளை ஒன்றுகூட்டி சென்னை கோட்டைக்கு மிகப் பெரிய பேரணியையும் நடத்தினோம். இந்நிலையில், சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பணிக்கு ஆளெடுக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், அந்தப் பணிக்கு தமிழ்நாடு மாவட்டங்கள் தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்தில் மத்திய அரசு சார்ந்த பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.