2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, காவல் துறையினரால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் இடைக்கால அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் மே 14ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.
அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று (செப்.13) காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக இடைக்கால அறிக்கை பெறப்பட்டது. பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் முழு அறிக்கையை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையை பெற்றபின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - யாரும் தப்ப முடியாது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்