சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காச நோய்க்கு பன்முகத்தன்மை கொண்ட புதிய மருந்தினை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காசநோய்க்கு ஊசி இல்லாமல் வாய்வழியாக சாப்பிடக்கூடிய மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளோம். உலக சுகாதார நிறுவனம் 2030ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளது. பிரதமர் 2025ஆம் ஆண்டு இந்தியாவில் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென உறுதி மேற்கொண்டுள்ளார். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை விரைந்து மேற்கொண்டுள்ளது. அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இணைக்கும் வகையில் காச நோய் ஒழிப்பு முகாம்கள் நடத்தி உள்ளோம்.
விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு காச நோய் பாதிக்கப்பட்ட நோயாளி 24 முதல் 28 மாதம்வரை மருந்து உட்கொள்ளும் நிலை இருக்கிறது. தற்போது உலக சுகாதார நிறுவனம் மத்திய அரசின் உதவியுடன் அதனை 18 மாதங்களில் இருந்து 20 மாதங்களாக குறைத்துள்ளது.
ஏற்கனவே உட்கொள்ளும் மருந்தை உட்கொள்வதால் காசநோய் அதிகரிக்கும். அதற்கு 6 மாதம் ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும். அதுபோன்ற நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக புதிய கண்டுபிடிப்பான பன்முக கூட்டு மருந்தினை அறிமுகம் செய்துள்ளோம். இவர்கள் ஊசி போடாமல் தொடர்ந்து உட்கொண்டால் போதும்.
ஒரு நோயாளிக்கு 61 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்தினை அரசு இலவசமாக அளிக்கிறது. மேலும் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக மாதம் ரூ.500 அரசால் வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு காச நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அரசு மருத்துவர்கள் காச நோய்க்கான சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியோவை ஒழித்தது போல் காச நோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 1,70,722 பேருக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் 14 நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களின் இருப்பிடத்திற்குச் சென்று எக்ஸ்ரே எடுக்கப்பட்டு காசநோய் இருக்கிறதா என்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.