சென்னை: எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்படுமா என, டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டுமே கரோனா பாதிப்பு ஏற்படுமா? டிடிவி தினகரன் கேள்வி! - கிராமசபை கூட்டம் ரத்து
எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும்போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்படுமா என கேள்வி எழுப்பிய டிடிவி.தினகரன், மாநிலம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடு அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக, கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தி (அக்.2) அன்று தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது. திடீரென நேற்றிரவு தமிழ்நாடு அரசு, கிராம சபை கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, எதிர்கட்சிகள், விவசாயிகள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
கிராமப்புற மக்களின் பிரச்னைகள், தேவைகளைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பாகவுள்ள கிராமசபை கூட்டங்களைக் கரோனாவைக் காரணம் காட்டி, ரத்து செய்யப்பட்டிருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும். ஊருக்கு ஊர் வலுக்கட்டாயமாகக் கூட்டம் திரட்டி, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்களை நடத்தும் போது, கிராமசபை கூட்டம் நடத்தினால் மட்டும் கரோனா பாதிப்பு ஏற்படும் என்று சொல்வது ஏற்கக்கூடியதாகவா இருக்கிறது? என்று அந்தப்பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.