சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. 2021-22 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து , லிட்டருக்கு ரூ.5 விலையைக் குறைப்போம் என்று சொன்னவர்கள் இப்போது பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு ரூ.3 மட்டும் குறைத்திருக்கிறார்கள். இது ஆறுதலளித்தாலும், விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான டீசல் விலையைக் குறைக்கும் வகையில் அதன் மீதான வரியையும் தமிழ்நாடு அரசு குறைக்க வேண்டியது அவசியம்.
செயல் திட்டம் இல்லை
வரி வருவாயில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக நிதியமைச்சர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் சீர்திருத்தத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதற்கான செயல் திட்டம் (Road Map) பட்ஜெட்டில் இல்லை.
அதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. தேர்தல் நேரத்தில் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் ரத்து என்று வாய்க்கு வந்தபடி அடித்துவிட்டவர்கள், தற்போது அதனை செயல்படுத்தாமல் இழுத்தடிப்பதற்கான வழிகளைத் தேடுவதைப் போன்று தெரிகிறது. இது, திமுக தனது வழக்கப்படி மக்களை பட்டவர்த்தனமாக ஏமாற்ற நினைக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.