சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்சயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருக்கும் 10 பேரும் தண்டனை பெற போகும் காலம் நெருங்கிவிட்டதாகவும், ஜனநாயக ரீதியாக தேர்தலில் நாம் வெற்றி பெறும் போது அதிமுக தானாக நம்மிடம் வந்து சேரும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று காலை நடைபெற்றது. அமமுக துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள், 2800-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன்றைய பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 14 வது தீர்மானமாக தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டது. அமமுக தொடங்கப்பட்டதிலிருந்து தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. பல இடங்களில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன் சசிகலாவிற்காக தலைவர் பதவி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் எப்போது வந்தாலும் பதவி ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டிறுப்பது, சசிகலா அமமுகவிற்கு வர வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், ஆர் கே நகர் வெற்றியை தவிர்த்து பெரிய வெற்றி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. வரும் காலத்தில் அமமுக தான் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்க இருக்கிறது. ஜெயலலிதாவின் லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்டவுள்ள இயக்கம் அமமுக தான் எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மண்டலங்களிலும் பலம் பொருந்திய கட்சியாக, பிரதமரை தேர்வு செய்வதில் அமமுகவும் பங்கு வகிக்கும் என கூறினார்.