சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமை நடைபெற்றது. இதில், கட்சியின் வளர்ச்சி குறித்தும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் செயல்படும் விதம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அமமுகவின் கிளைகளை வலுப்படுத்தவும், குறிப்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மாற்று கட்சிக்கு செல்லவிடாமல் தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், செயற்குழு உறுப்பினகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும். கடந்த பொது தேர்தலின் போது தலைவர் பதவி நியமனம் குறித்து பேசப்பட்டது. தற்போது இந்த ஆண்டின் டிசம்பர் மாத பொதுக்குழுவில் மீண்டும் கூடி கட்சி தலைவர் தேர்வு குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், தானும் இணைந்து செயல்பட உள்ளோம். வரக்கூடிய காலங்களில் அதற்கான சந்திப்புகள் நடைபெறும்” என கூறினார்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “சட்டம் அதன் கடமையை செய்யும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. செந்தில் பாலாஜி எனக்கு தெரிந்த நண்பர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இரண்டு ஆண்டு பணியாற்றியவர், அவருக்கு உடல்நிலை குறைகள் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. எதையும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்லாது திமுகவுக்கும் நெஞ்சுவலி வந்துள்ளது.
அமலாக்க துறையினர் விசாரணை முறையே வெவ்வேறு. அவர்களது சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தனக்கு தெரியும். எனவே இது திமுகவுக்கு தலைவலிதான். திமுக தனக்கு வந்தால் ரத்தம் பிறருக்கு வந்தால் தக்காளி சட்னியா?. ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஊடகங்களில் பேட்டி கொடுத்ததை பார்த்திருப்பீர்கள், நெருப்பில்லாமல் புகையாது, ஆகவே இது பழிவாங்கும் நடவடிக்கை என அவர் கூறலாம். அனைத்தையும் நோண்டி பார்த்தால் தான் தெரியும். அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை எதிர் கொள்ள முதலமைச்சர் பயப்படுகிறார்.