அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில், "தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிற உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையைப் பழையனவற்றை நீக்குவதற்கும், எல்லாம் தரும் இயற்கையை வணங்குவதற்கும், விவசாயத்திற்கு மட்டுமின்றி மனித இனத்திற்கே பக்க பலமாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறுவதற்கும், உறவுகளையும் நட்பையும் கொண்டாடி மகிழ்வதற்குமான திருநாளாக நம் மூதாதையர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.
‘விவசாயம் தொழில் அல்ல; வாழ்க்கை முறை’ என்பதை நமக்கு எடுத்துக்காட்டும் பொங்கல் திருநாள், தமிழினத்தின் பெருமையையும், உயர் தனிச்சிறப்பையும் உலகிற்கு உரக்கச் சொல்கிறது. எனவே, ‘விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிற நாடுதான் உன்னதமான தேசமாக இருக்கும்’ என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டு உழவையும் உழவர்களையும், அவர்களுக்கு உற்றத்துணையாக உள்ள உயிர்களையும் கொண்டாடுவோம்.
தை முதல் நாளில் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி பூரிப்படையும் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாட்டிற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும். என் பேரன்புக்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் இல்லங்களிலும் ஆனந்தமும் ஆரோக்கியமும் தழைத்தோங்கட்டும் என வாழ்த்துகிறேன்" என அதில் கூறியுள்ளார்.