தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடைகளை திறக்கும் ஆய்வு - வறுத்தெடுத்த டிடிவி தினகரன் - Prohibition Minister Muthuswamy

'காலை நேரத்திலேயே டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் ஆய்வு என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும்' என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

காலை நேரத்திலேயே டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் ஆய்விற்கு டிடிவி தினகரன் கண்டனம்
காலை நேரத்திலேயே டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் ஆய்விற்கு டிடிவி தினகரன் கண்டனம்

By

Published : Jul 11, 2023, 1:24 PM IST

சென்னை:டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 10) டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, 'டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி லிட்டர் மது வாங்குவோர் மற்றொருவருக்காக காத்திருக்க நேரிடுகிறது. ஆய்வுகள் படி, இதுபோல சுமார் 40 சதவீதம் பேர் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றனர். எனவே, மது பிரியர்கள் வசதிக்காக 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது. காலை நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு கோரிக்கை எழுந்து உள்ளது' எனவும் கூறினார்.

இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்த்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் உரத்தக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தச் சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும். கூலி வேலைக்குச் செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா?.

ஏற்கனவே, தமிழ்நாட்டில் மது போதையினால் வேலைத்திறன் வெகுவாக குறைந்து வருவதை அரசு உணர்ந்துள்ளதா?. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையது அல்ல. ஆகவே, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதும், மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மதுவிற்கு அடிமையானோரைக் கண்டறிந்து மறுவாழ்வு முகாம்களில் சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக இருக்கும்.

அதை விடுத்து, மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களைத் திரட்டி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:டெட்ரா பாக்கெட்டில் மது, டாஸ்மாக் நேர மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details