சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுகவைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது என்றும் தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்கிறார்கள் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் இணைந்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை பெரிய அளவில் நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்காக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்துள்ளது எடப்பாடி தரப்பிற்கு சவாலாக அமையும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இணைப்பின் மூலம் தென் மாவட்டங்களில் கணிசமான ஆதரவு இவர்களுக்கு அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டம் குறித்து அமமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது ஆதாவைத் தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து டிடிவி தினகனும் பங்கேற்க உள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இக்கண்டன ஆர்பாட்டத்தில் அந்தந்த மாவட்டத்தைச் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :EPFO Intrest Rate : வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?