தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக ஆட்சியில் நதி நீர் உரிமைகள் பறிபோகின்றன' - டிடிவி தினகரன் - அமமுக பொதுச்செயலாளர்

சென்னை: திமுக ஆட்சியில் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் நதி நீர் உரிமைகள் பறிபோவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TTV Dhinakaran  TTV Dhinakaran statement  DMK regime  Tamil Nadu river rights  டிடிவி தினகரன்  நதிநீர் உரிமைகள்  திமுக ஆட்சி  அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் அறிக்கை
டிடிவி தினகரன்

By

Published : Sep 25, 2022, 12:39 PM IST

நதி நீர் உரிமைகள் தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு - ஆந்திர எல்லையிலுள்ள புல்லூரில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கப்போவதாக ஆந்திர அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருப்பது பெரும் கவலையளிக்கிறது.

பல மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதியில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக புதிய அணையைக் கட்டுவதும், ஏற்கெனவே உள்ள அணையின் கொள்ளளவை அதிகரிப்பதும் சட்டப்படி தவறானதாகும். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் இத்தகைய முயற்சியை ஆந்திர அரசு மேற்கொண்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஜெயலலிதா ஆந்திர அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்கள்.

அதே திட்டத்தைத் தான் தற்போது ஆந்திரா மீண்டும் கையில் எடுத்துள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்டை மாநிலங்களுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. நதி நீர் பிரச்னைகளில் நமக்குரிய உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பறிகொடுப்பதே திமுக ஆட்சி காலங்களின் வரலாறு. கருணாநிதி ஆட்சியைப் பின்பற்றி ஸ்டாலின் ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ரூ.1000 கோடியை ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத்தொடங்கிவிட்டது. 124 ஆண்டுகளாக தமிழ்நாட்டிடமிருந்த முல்லைப் பெரியாறில் தண்ணீர் திறந்துவிடும் உரிமையைக் கேரளாவிடம் பறிகொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது, ஸ்டாலின் அரசு.

இப்போது புல்லூர் அணைக்கட்டின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டால் மழை, வெள்ள காலங்களில் பாலாற்றில் வரும் தண்ணீரின் அளவும் குறைந்து போய்விடும். பாலாற்றுப் படுகை விவசாயம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதி மக்கள் குடிநீருக்காகவும் பாலாற்றைத்தான் நம்பியிருக்கின்றனர்.

எனவே, உடனடியாக ஆந்திர அரசின் இம்முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் ரீதியான அழுத்தங்கள் மட்டுமின்றி 2016-ல் ஜெயலலிதா அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் திமுக அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆற்றுவாரியை காணவில்லை... நடவடிக்கை இல்லை என பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details