சென்னை:ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். முதலமைச்சரின் கருத்து குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கச்சத்தீவை இலங்கை அரசிடம் தாரை வார்க்க காரணமாக இருந்தது திமுக தான் என்று உலகுக்கே தெரிந்த நிலையில் அதனை மீட்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது நகைப்புக்குரியது.
மேலும், கச்சத்தீவு பகுதியை கடந்த 1974ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. எம்.ஜி.ஆர் அப்போதைய தமிழ்நாடு அரசு மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் கூறி நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் இந்திரா காந்தியிடம் மனு கொடுத்திருந்தார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் நலன்களை குழிதோண்டி புதைக்கும் வகையில் மத்திய அரசு, இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்த போது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, அப்போதைய கருணாநிதி அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக சார்பில் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததை எல்லாம் எதிர்ப்பு என்ற பெயரில் இப்போது சுட்டிக்காட்டுவது கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும், மீண்டும் திமுக மக்களை ஏமாற்றவே நினைக்கிறது என்பது உறுதிபடத் தெளிவாகிறது.