இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா, தற்போது திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கோவை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும் அதன் தாக்கம் அதிமாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், சென்னையைத் தவிர வெளிமாவட்டங்களில் கரோனா தொற்று குறைவு என்று கூறியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறார் என்று தெரியவில்லை.
கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது பற்றிய கவலை ஆளுவோருக்கு இல்லை என்பதற்கு முதலமைச்சரின் அலட்சியமான பேட்டியே உதாரணம். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு டெண்டர்களை விடுவதில் அரசு காட்டும் ஆர்வத்திலும் அக்கறையிலும் கொஞ்சமாவது கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காட்டியிருந்தால் நிலைமை இந்தளவுக்கு மோசமாகியிருக்காது. தங்களின் திறமையின்மையால் நாளுக்கு நாள் சூழல் மோசமாகிவருவதை மறைப்பதற்குத்தான் முதலமைச்சர் தற்போது கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்க நினைக்கிறார்.