தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து - போக்குவரத்து துறை அறிவிப்பு! - போக்குவரத்து துறை

TTF Vasan License canceled for 10 years: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:16 AM IST

சென்னை: சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற வைகுந்தவாசன், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டிடிஎஃப் வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே, ஜாமீன் வழங்கக் கோரி டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்றைய முன்தினம் (அக்.5) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், மேலும் வலது கையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, காவல் துறை தரப்பில், வாசன் தன்னை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் 40 லட்சம் ரசிகர்களுக்காக இது போன்று செய்துள்ளார் எனவும், இது போன்ற சாகசங்களை செய்ய வாசன் 2 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அது மட்டுமல்லாமல், இவரின் செயலால் கவரப்படும் இளைஞர்களிடையே அதிவேகமாகச் சென்று வழிப்பறியில் ஈடுபடும் எண்ணம் ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதற்காக டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி விட முடியாது. ஜாமீன் வேண்டும் என்றால் முதலில் பைக்கை எரித்து விட்டு, யூடியூப் பக்கத்தை நிரந்தரமாக முடக்கிவிட்டு நீதிமன்றத்தை அணுகலாம்” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசனின் வலது கையில் உள்ள காயத்தை சிறைத்துறை ஆய்வு செய்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், டிடிஎஃப் வாசனின் வாகன ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு, அதாவது 06.10.2023 முதல் 05.10.2033 வரை ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

இதையும் படிங்க:“யூடியூபர் டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம்” - ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details