சென்னை:வடபழனி கமலா திரையரங்கில் 'காலேஜ் ரோடு' படத்தின் சிறப்பு காட்சி இன்று (ஜனவரி 2) காலை திரையிடப்பட்டது. இதனை காண்பதற்காக நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூபர் TTF வாசன் திரையரங்கிற்கு வந்திருந்தனர்.
TTF வாசனுக்கென்று அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் TTF வாசன் வந்து இறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நெம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையானது. இது குறித்து தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார், நெம்பர் பிளேட் இல்லாமல் இருந்த TTF வாசன் வந்த பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது, அந்த கார் TTF வாசனின் நண்பர் பிரவீனுக்கு சொந்தமான கார் எனவும், கர்நாடக மாநிலத்தில் கார் வாகன பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் for registration என காரில் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அது உடைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிஎப் வாசன், "லிங்கேஷ் அண்ணன் படம் பண்ணுவதே எனக்கு தெரியாது. படம் அருமையாகவும் கருத்துள்ளதாகவும் இருந்தது. கல்லூரி மாணவர்கள் லோனுக்காக விண்ணப்பித்து கிடைக்காமல் இருப்பது போன்ற பல விஷயங்களை இந்த படத்தில் காட்டி உள்ளனர். செண்டிமென்ட் காட்சியிலும் நன்றாக இருக்கிறது" என கூறினார்.